top of page
Search

தமிழில் கட்டடக்கலை



மொழி என்றால் என்ன?


மனிதர்கள் தோன்றிய நாள் முதலே ஏதேனும் ஒரு வகையில் தங்களது கருத்துகளை பரிமாறியும், அவற்றைப் பதிவு செய்தும் வந்துள்ளனர். மொழி என்பது மனிதர்களின் கருத்துப் பரிமாற்றத்திற்கான கருவிகளுள் ஒன்றாகும். மொழியானது, ஒவ்வொரு இடத்துக்கும் அதன் மக்களுக்கும் தகுந்தது போல தன்னை மாற்றிக் கொண்டு, வெவ்வேறு மக்களுக்கான அடையாளமாக வலு பெற்றுள்ளது. கருத்து பரிமாற்றம் மக்களின் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமோ, அதைப் போன்றே மொழியின் வளர்ச்சியும் முக்கியமாகும். மொழியின் வளர்ச்சிக்கென வெவ்வேறு மக்களும் அமைப்புகளும் பழங்காலம் முதலே பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது எண்ணங்களையும் யோசனைகளையும் வெளிப்படுத்த மொழியினை ஓர் முக்கிய ஊடகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். உரைகள், கவிதைகள், இலக்கியங்கள், இலக்கணங்கள், கதைகள் மற்றும் கட்டுரைகள் என மொழிக்கு வெவ்வேறு முகங்கள் கொடுத்து அழகுப் பார்க்கின்றனர்.



கற்றலில் மொழி


கற்றலில் மொழி என்பது மிகவும் அவசியமாகும். “இளமையில் கல் சிலை மேல் எழுத்து” என்ற பழமொழிக்கு இணங்க, ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும், அவரின் இளம் பருவத்தில் பயிர் செய்யப்பட்ட கருத்துகளும் பாடங்களும் சிலையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைப் போல நெடுநாள் வரை நிலைக்கும். ஒவ்வொரு குழந்தையும் தனது வாழ்நாளில் பெரும்பங்கினை கல்விக் கூடத்திலேயே செலவிடுகின்றது. அப்படி இருக்கையில் மொழி ஒரு ஊடகமாக மட்டும் இல்லாமல் கற்றல் எனும் முடிவிலா பயணத்தில் ஒரு முக்கிய பங்கினை வகுக்கிறது. புதிய எண்ணங்கள் தோன்றுவதற்கு வித்தாக இருக்கும் கல்வியாளர்களின் தொகுக்கப்பட்ட சிந்தனைகளை, எளிமையான வகையில் ஒரு குழந்தையிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக கற்றலில் மொழி இருக்கின்றது.



கற்றலில் தாய்மொழியின் முக்கியத்துவம்


தாய்மொழி என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாக இருக்கையில், கல்வியிலும் பணி இடங்களிலும் ஆங்கிலம் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தப்படுவதனால், கருத்துப் பரிமாற்றத்திலும் சரி, தன்னம்பிக்கையிலும் சரி மாணவர்கள் உட்பட பலரும் தடுமாற்றம் அடைகின்றனர். இதன் மூலம் ஆங்கிலம் தேவையில்லை என நாங்கள் சொல்லவில்லை. எவ்வாறு ஒரு சில காரணங்களுக்காக ஆங்கிலம் அவசியமோ, அதைப் போலவே வேறு சில காரணங்களுக்காக தாய்மொழியும் அவசியம். வட்டார மொழிகள் என்பது ஒவ்வொரு ஊரின் தனித்துவத்வதைத் தன்வசம் கொண்டதாக இருக்கும். வாழ்க்கை முறை, உணவு, கலாச்சாரம், கட்டடக்கலை, மரபு வழிமுறைகள் என வட்டார மொழிகளின் மூலம் நாம் பலவற்றை அறிந்துக் கொள்ள முடியும். ஓரிரு நாட்களில் உருவானவை அல்ல அவை; பல நூறு ஆண்டுகளாக அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு மருவி உருவானவை. இவ்வாறு இருக்கையில் ஒவ்வொரு பகுதியின் சிறப்பம்சமும், வரலாறும், மக்களின் வாழ்க்கை முறையும் அந்தந்த மொழியினில் சொல்லப்பட்டால் தானே சரியாக இருக்கும்? மேலும், பிற மொழிகளில் அல்லாமல், மக்கள் சிந்திக்கும் மொழியில் கற்பித்தாலே எளிதாக இருக்கும் அல்லவா? வட்டார மொழிகளில் சொல்லப்படும் கருத்துகளானது ஒரு சில மக்களை மட்டுமல்லாமல் அனைவரையும் சென்றடையும்.



மரபுக் கட்டடக்கலை


ஒவ்வொரு பகுதிக்கும் மொழி தனித்துவமாக இருப்பது போலவே, அவற்றின் மரபுக் கட்டடக்கலையும் தனித்துவமாக இருக்கும். பல்லாயிரம் ஆண்டுகளாக மரபுக் கட்டுமான முறைகள், செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளன. மேலும், அவை உள்ளூர் தன்மையை கருத்தில் கொண்டு, பயன் செலவு திறன் கொண்டதாகவும், சுற்றுச்சூழலுக்கு குறைவான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட செயல்முறைகள் எல்லாம் பல்வேறு கல்விக் கூடங்களில் உள்ள நூல்களிலும், ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இடம்பெற்றுள்ளன. அவை சென்று அடைவதோ ஆங்கிலம் தெரிந்த ஆங்கிலம் அறிந்த ஒரு சிலருக்கு மட்டுமே. ஆனால் இவைப் போன்ற சிறப்பான திறன்மிக்க செயல்முறைகளும், இவற்றை சார்ந்த கருத்துகளும் அனைவரையும் அல்லவா சென்றடைய வேண்டும்?



கட்டடக்கலைத் தமிழில், ஏன்?


கட்டடக்கலை எனும் ஒரு துறை இருப்பதே இன்றளவிலும் வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். இதற்கு முக்கியக் காரணம் கட்டடக்கலை கல்வி ஆனது மாணவர்களையும் பொது மக்களையும் சென்று அடைவது ஆங்கிலத்தில் மட்டுமே. கேரளாவில் ‘வீடு’ என்றொரு இதழ், மலையாளத்தில் கட்டடக்கலைச் சார்ந்த கருத்துகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கிறது. இதைப் போன்றே தமிழிலும் கட்டடக்கலை அனைவரையும் சென்றடைய வேண்டும். இவ்வாறு சென்று அடைவது இந்தத் துறைப் பற்றிய விழிப்புணர்வினை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல், இந்தத் துறையில் பணியாற்றும் சாதாரண மக்களுக்கும், கட்டக்கலைஞர்களுக்கும், கட்டடக்கலையில் பயிலும் மாணவர்களுக்கும் இடையே நிலவும் கருத்துப் பரிமாற்ற இடைவெளியினையும் நீக்கும். இவ்வாறு தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்றளவும் பின்பற்றப்பட்டு வரும் மரபுக் கட்டுமான முறைகளின் முக்கியத்துவத்தையும் சிறப்பம்சங்களையும், வீடு கட்ட நினைக்கும் சாமானிய மனிதர்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும்.



சிறுதுளி பெருவெள்ளம்


கொத்தனார் முதல் அரசு பள்ளியில் பயிலும் குழந்தை வரை, மரபுக் கட்டுமான முறைகளை எளிமையான வகையில் அழகுத் தமிழில் கொண்டு சேர்ப்பதற்கென முளைத்த ஒரு சிறு கூட்டுமுயற்சியே மாவிலை ஆகும். நம் நினைவில் இருக்கும் கட்டடக்கலைஞரான லாரி பேக்கர் வளங்குன்றா கட்டடக்கலையின் முன்னோடி ஆவார். அவர் விட்டுச்சென்ற காலத்தை வெல்லும் படைப்புகள் ஏராளம். அவற்றில் ஒன்று தான் அவர் ஆங்கிலத்தில் எழுதிய வரிவடிவங்கள் கொண்ட நூல் தொகுப்பு ஆகும். இதில் அவர் ஆற்றல் திறன் வாய்ந்த கட்டுமான முறைகளைப் பற்றியும் விவரித்து உள்ளார்; ஆலப்புழாவில் எவ்வாறு சுற்றுலாத் துறையை மேம்படுத்தி அதன் அழகை மீட்டெடுப்பது என்றும் பகிர்ந்துள்ளார்; கட்டடக்கலைஞரின் பொறுப்புகளையும் பட்டியலிட்டுள்ளார்; கட்டுமானச் செலவைக் குறைப்பது பற்றியும் எழுதியுள்ளார். சமூகப் பார்வையுடன் செயல்பட்டு வந்த லாரி பேக்கர் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கும், ஊரக வாழ் மக்களுக்கும், பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களை இந்த நூல்களில் பரிந்துரைத்துள்ளார்.


சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல், லாரி பேக்கர் விட்டுச் சென்ற மரபினை அவரின் வழித்தடத்தில் பின்தொடரும் மாவிலை தற்போது துளிரும் இலையாக உருவாகியுள்ளது.பிரத்தியேகமாக கட்டடக்கலைக்கென தமிழில் ஓர் அகராதி, கட்டடக்கலைச் சார்ந்த நூல்களின் தமிழாக்கம் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டடக்கலைச் சார்ந்த கருத்துகளை தமிழில் பகிர்தல் போன்ற செயல்களில் ஒரு புறம் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். மற்றொரு புறம் தற்போது தமிழாக்கம் செய்யப்பட்ட நூல்களின் வெளியீட்டு விழாவை நோக்கி பெரும் கனவுடன் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். சிறுதுளி போன்ற இவ்வகை கூட்டுமுயற்சிகள் பெருவெள்ளமாக மாற, மக்களின் ஒத்துழைப்பும் ஒருகிணைந்த எண்ணமும் செயல்பாடும் மிகவும் முக்கியம்.



வாருங்கள் பயணிப்போம் நெடுந்தூரம் இந்தப் பயணத்தில்…


‘தமிழ் மொழியில் கட்டடக்கலை’ எனும் கனவானது அவ்வளவு எளிதில் அடையக் கூடியது அல்ல. எவ்வாறு ஒரு கட்டடம் வடிவச்சாரம் போடப்பட்டு, பின்னர் கடைக்கால் அமைக்கப்பட்டு, அதன் மேல் அடிப்பீடம் அமைக்கப்பட்டு, அதன் பின்னர் சுவர்கள் அமைக்கப்பட்டு எழுப்பப்படுகிறதோ, அவ்வாறே இது போன்ற முயற்சிகளும் படிப்படியாகவே வளர்ச்சி அடையும். எனவே, மாவிலை போன்ற முயற்சிகள் இது போன்ற மாற்றுச் சிந்தனைகளுக்கு ஒரு வடிவச்சாரமாகத் திகழும். ஆனால் அவற்றை மேலும் வலுவடைய செய்வதற்கு உங்களைப் போன்ற ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஊக்கமும் மிகவும் முக்கியம் ஆகும். எனவே வாருங்கள்! கட்டடக்கலை அறிவை பொதுவாக்கும் இந்தப் பயணத்தில் ஒன்றாக இணைந்து பயணிப்போம். கட்டடக்கலைத் துறையை அனைவரும் நாடி வரும் வண்ணம் எளிமைப்படுத்துவோம். மாற்றத்தை கைக் கோர்த்து விதைப்போம்.



317 views2 comments
bottom of page